பழனி முருகன் கோவிலில் 108 விளக்குபூஜை
February 4, 2020 • Muthu kumar • ஆன்மிகம்


" alt="" aria-hidden="true" />


பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று தை மாத கார்த்திகை உற்சவம் ஆகும். இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, காலை 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜை நடைபெற்றது.

அப்போது முருகப்பெருமானுக்கு வேடர் அலங்காரம் செய்யப்பட்டது. அதையடுத்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரமும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரமும் செய்யப்பட்டது. மேற்கண்ட பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கார்த்திகை உற்சவத்தையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 6.40 மணிக்கு தங்கமயில் வாகன புறப்பாடு நடந்தது. இரவு 7 மணிக்கு மேல் தங்கரதத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது