இயற்கையின் அழகை ரசிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் அழகிய கடற்கரைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை காண்பது பலருக்கும் பிடித்தமான செயல் எனலாம். ஏனென்றால் கடலுக்குள் நாம் கண்டிராத அரிய வகை உயிரினங்களும் நம் கண்களை கொள்ளை கொள்ளும் அழகிய வண்ண மீன்களும் இருக்கும். அதே நேரத்தில் ஆபத்துகளும் இருக்கும் என்பதையும் நாம் அறிவோம்.
கடல்வாழ் உயிரினங்கள், குறிப்பிட்ட பகுதியில் கடலின் தன்மை, புதை படிமங்கள் போன்றவற்றை கண்டறிய நீர் மூழ்கி வீரர்களும் கடலுக்குள் செல்வது உண்டு. அவ்வகையில், பிரிட்டனில் கடலுக்குள் சென்ற நீர் மூழ்கி வீரரை சீல் எனப்படும் கடல்நாய் ஒன்று கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரிட்டனின் நார்தம்பெர்லாண்ட் பகுதியைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர் பென் பர்வில்லி அப்பகுதியில் உள்ள ஃபார்னி தீவுகள் உள்ள கடல் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு நீந்திக் கொண்டிருந்த கடல் நாய்களில் ஒன்று அதன் கைகளால் அவரது கையை பிடித்தது. பின்னர் அவரை தழுவ முயன்றது. இறுதியில் பென்னும் அதை தழுவினார்.
அவருடன் சென்ற மற்றொரு நீர்மூழ்கி வீரர், இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது